திகதி: 04.07.2009 // தமிழீழம்
தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.
எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென்றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்கவேண்டும்.
ஆனாலும், தங்களது சுய நலன்களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
தலைவர் எப்போதும் தன்னையொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கௌரவமான சாவு என்று கருதுபவர்.
இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டுகளில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.
பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.
அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,
'தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.
நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோதுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்'
என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.
பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படை நிகழ்ந்தது என்பது வரலாறு.இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.
இதேவேளை, தலைவரின் பாதுகாப்பு எப்போதும் தலைவரின் கையில் இருந்ததில்லை. இதனை அடுத்துவரும் வாரங்களில் பார்ப்போம்.
ஈழமுரசு இதழில் முன்னாள் போராளி ஒருவர் எழுதிவரும் தொடரில் இடம்பெற்றுள்ள ஆக்கம் இது.
நன்றி - ஈழமுரசு
---------
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment