Tuesday, June 16, 2009

'கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்'

தமிழீழக் கனவோடு வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பலி கொள்ளப்பட்டுவிட்டார்கள். அந்த இலட்சியத் திற்காகப் போராடிய போராளிகளும், தளபதிகளும் சுட் டெரிக்கப்பட்டு விட்டார்கள். உயிருக்குப் போராடிய காயமடைந்த மக்களையும் போராளிகளையும் காப்பாற்றவென்ற வேட்கையுடன் மானத்தோடு மாவீரராகும் தத்துவத்தையும் கைவிட்டு, சரணடைய முற்பட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனும், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனும் கூட வெள்ளைக் கொடியுடன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள்.

எல்லாமே சுடுகாடாக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சி தருவதை ஐ.நா.வின் பொதுச் செயலர் பான் கி மூனும் வானிலிருந்து பார்வையிட்டுச் சென்றுவிட்டார்.

வன்னியில் தப்பிப் பிழைத்தவர்கள் முட்கம்பி வேலிச் சிறைக்குள் அடிமைச் சின்னமாக, அடுத்த வேளை உண வுக்கு எதிரியின் கையைப் பார்க்கும் இழி நிலைக்கு உட் படுத்தப்பட்டு உள்ளார்கள். அங்கும் இளம் வயதினர் வடி கட்டப்பட்டு, வதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சரணடைந்த போராளிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன.

ஆனாலும், சர்வதேசங்கள் இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் போராட் டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து சிங்கள சிறிலங்கா நடாத்திய பரப்புரைகளை ஏற்று, விடுதலைப் புலிகளைத் தமது நாடுகளில் தடை செய்ததன் மூலம் இந்த இனப் படுகொலையில் பங்கு வகித்த உலக நாடுகள் தமிழினத்தின் அத்தனை அழிவு களுக்குப் பின்னரும் தமிழர்களுக்கான நீதியை வழங்க முன்வரவில்லை.

வீதியிலிறங்கிப் போராடுகின்றோம்... உண்ணாவிரதங்கள் இருக்கின்றோம்... கண்ணீர் விட்டுக் கதறுகின்றோம்... 'எஞ்சியுள்ள எமது மக்களையாவது சிங்கள இனவாத அரசின் இன அழிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்...' என்று. உவ்வொரு மணித் துளிகளாக... நாட்களாக... வாரங்க ளாக... காலம் கடந்து செல்கின்றதே தவிர வேறேதும் நடப்பதாகத் தெரியவில்லை.

'தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்' என்று சிங்களம் மீண்டும் ஒரு கொண்டாட்டத்திற்கு நாள் குறித்துள்ளது. பாதுகாப்பை இழந்த தமிழர்கள் மீது சிங்களனின் காறித் துப்பல்கள்... குனிந்த தலையுடன் அதைத் துடைத்துவிட்டு நகரத்தான் அவர்களால் முடிகின்றது. தமிழ்ப் பெண்கள் நடு ரோட்டில் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகிறார்
கள்... ஆனாலும் விதியை எண்ணி அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று தலை முழுக மட்டும்தான் அவர்களால் முடிகின்றது.

இப்போது டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்த சங்கரிகள் முகங்கள் மட்டும் பயம் நீங்கிப் பிரகாசிக்கின்றன. பாவம், தமிழர்கள் தங்கள் பலத்தை இழந்து கூனிக் குறுகி முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற யாருமே கிடையாது. ஆனால், சிங்கள தேசத்தின் விருப்பங்களை ஏற்று 'பாலூற்றிக் கடமை செய்ய' புலம் பெயர் தேசங்களிலும் சிலர் ஆலாய்ப் பறக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக நொருக்கப்பட்டிருக்கலாம்... போராளிகள் பலர் அந்த நெருப்பு வேள்விக்குப் பலியாகிப் போயிருக்கலாம்... தளபதிகள் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டிருக்கலாம்... ஆனாலும் நாங்கள் நம்ப மாட்டோம் 'எங்கள் சூரிய தேவனை இந்தச் சிறு பொறிகள் சுட்டெரித் திருக்கும் என்று...'

எம்முள் நிறைந்து... எப்போதும் உடன் இருந்து... எம்மை வழிநடத்தும் எம் தலைவன் மரணம் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டவன். 'மனிதன்தான் மரணம் அடைவான். மாவீரனுக்கு ஏதடா மரணம்?' என்ற இயக்குனர் சீமானின் வார்த்தைகள் எம் நெஞ்சத்தை மீண்டும் உறுதி கொள்ள வைக்கிறது. சத்திரியன் சாவதில்லை. அவன் சரித்திரம் ஆகின்றான்.

'நாம் வீழமாட்டோம்! நாம் வீழமாட்டோம்!!' என்ற நம்பிக்கைத் துடிப்பு மட்டுமே தமிழர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. கரிகாலன் மீண்டும் வருவான்... என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களை மீண்டும் நிமிர வைக்கின்றது. அது அவர்களின் ஆத்மார்த்த உணர்வு. அந்த நம்பிக்கை அவர்கள் சாவு வரை நீடிக்கும். அதைக் கலைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

'கதிரைக் கனவுகளால் எங்களைச் சாகடிக்காதீர்கள்'

No comments:

Post a Comment